ஒரே போட்டியில் இரு புள்ளிகளை இழந்த இரு அணிகள்! – ஐசிசி நடவடிக்கை
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 சுழற்சியில் தலா 2 புள்ளிகள் குறைப்பு.
இங்கிலாந்தில் இந்தாண்டுக்கான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஜூன் 16-ம் தேதி தொடங்கியது. ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி இம்மாதம் 28-ம் தேதி தொடங்குகிறது. இதில் குறிப்பாக, ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இருந்து, 2023-25 காலகட்ட வரையில் 3வது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆஷஸ் 2023 தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 சுழற்சியில் தலா 2 புள்ளிகள் குறைக்கப்பட்டன.
ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் மெதுவாக பந்துவீசிய காரணத்திற்காக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு, 40% அபாரதத்துடன் 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து இரு புள்ளிகள் குறைத்து ஐசிசி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தற்போது 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
முதல் முறையாக ஒரே போட்டியில் இரு அணிகளும் இரு புள்ளிகளை இழந்துள்ளது. ஐசிசி விதிப்படி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் மெதுவாக பந்துவீசினால் 2 புள்ளிகள் குறைக்கப்படுவதோடு, ஒவ்வொருவருக்கும் போட்டி கட்டணத்தில் 20% அபராதம் விதிக்கப்படும், இதில், அதிகபட்சமாக 100% வரையிலும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.