சாதனை உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்…63,523 புள்ளிகளில் வர்த்தகம்..! ஏன் இந்த மாற்றம்.?
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் பிஎஸ்இ சென்செக்ஸ் 195.45 புள்ளிகள் உயர்ந்து 63,523 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு.
கடந்த சில நாட்களில் ஏற்றத்துடன் இருந்த இந்தியப் பங்குச்சந்தை குறியீடுகள், இன்றைய வர்த்தக நாளில் இதுவரை இல்ல உச்சத்தை எட்டி புதிய சாதனையை படைத்தது. இன்று காலை 63,467 புள்ளிகள் எனத் தொடங்கிய சென்செக்ஸ் 250 புள்ளிகள் உயர்ந்து 63,588 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது.
தற்பொழுது, 195.45 புள்ளிகள் அல்லது 0.31% உயர்ந்து 63,523 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவிற்கு அந்நிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் ரூ.30,000 கோடிக்கு மேல் முதலீடு செய்திருப்பது மும்பை பங்குச்சந்தை குறியீடுகள் உயர்வுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 40.15 புள்ளிகள் அல்லது 0.21% உயர்ந்து 18,856 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. காலை நிலவரப்படி, 15.90 புள்ளிகள் சரிந்து 18,800 புள்ளிகளாக வர்த்தகமான நிலையில் தற்பொழுது 18,856 புள்ளிகளாக நிறைவடைந்துள்ளது.
பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால் சென்செக்ஸ் குறியீட்டில் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், டெக் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன.
மஹிந்திரா & மஹிந்திரா, ஐடிசி லிமிடெட், இண்டஸ்இண்ட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, மாருதி சுசுகி இந்தியா உள்ளிட்ட நிறுவங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன. நிஃப்டி குறியீட்டில் உள்ள மொத்த 50 பங்குகளில் 26 லாபத்திலும், 24 நஷ்டத்திலும் முடிவடைந்துள்ளன.