மீதமுள்ள மதுக்கடைகளையும் மூட கால அட்டவணை வெளியிட வேண்டும்! – அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss

தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல். 

தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் நாளை முதல் மூடப்படவிருப்பது வரவேற்கத்தக்கது; மீதமுள்ள மதுக்கடைகளையும் மூட கால அட்டவணை வெளியிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 5329 மதுக்கடைகளில் 500 கடைகள் நாளை முதல் மூடப்படும் என்று டாஸ்மாக் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இது தாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்க நடவடிக்கை ஆகும். தமிழ்நாட்டில் படிப்படியாக முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதை நோக்கிய பயணத்தின் தொடக்கமாக இது அமைய வேண்டும். தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இரு மாதங்களுக்கு மேலாகியும் அந்த அறிவிப்பு செயல்படுத்தப்படாமல் இருந்து வந்தது. சட்டப்பேரவையில் அறிவித்தவாறு மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தேன். அதன் பயனாக நாளை முதல் 500 மதுக்கடைகள் மூடப்படவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

மூடப்படும் மதுக்கடைகள் தவிர மீதமுள்ள 4829 மதுக்கடைகளும் படிப்படியாக மூடப்பட்டு தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். காலாண்டுக்கு 500 மதுக்கடைகள் மூடப்பட்டால், அடுத்த இரண்டரை ஆண்டுகளில் முழுமையான மதுவிலக்கு சாத்தியமாகி விடும். அதற்கேற்றவாறு உடனடியாக கால அட்டவணையை தயாரித்து வெளியிடுவதுடன், அதனடிப்படையில் மதுக்கடைகளை மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!’ என அறிவுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்