சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பதாக தகவல் வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. மாநில கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபருக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த 2 மாதத்திற்கு முன், இதே ரயில் நிலையத்திற்கு மிரட்டல் வந்த அதே எண்ணில் இருந்து மீண்டும் மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.