ஆளுநர் ரவியை நீக்க கோரி கையெழுத்து இயக்கம்.! முதல் நபராக கையெழுத்திட்ட கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு.!

RN Ravi - Nallakannu

ஆளுநர் ரவியை நீக்க கோரி மதிமுக துவங்கிய கையெழுத்து இயக்கத்தில் முதல் நபராக இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு கையெழுத்திட்டார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்க கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் மதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கலந்து கொண்டு, ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவியில் இருந்து நீக்க குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தில் முதல் ஆளாக நல்லகண்ணு கையெழுத்திட்டார்.

அதன் பின்னர் அவர் பேசும் போது, ஆளுநர் பொறுப்பை வைத்துக்கொண்டு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆளுநர் ரவி செயல்படுகிறார். மக்களுக்கு விரோதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தனிமனித ஆதிக்கம் செய்து அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வைகோ கையெழுத்து இயக்கம் தொடங்கியிருப்பது பாராட்டுக்குரியது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பாக முதல் ஆளாக கையெழுத்து போடுவதில் நான் பெருமை கொள்கிறேன் என்று நல்லகண்ணு பேசினார்.

இதனை தொடர்ந்து இரண்டாவது கையெழுத்தாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதிவு செய்தார். அதன் பிறகு அவர் கூறுகையில், தமிழர்களின் நலனுக்கும் அரசியல் சட்டத்திற்கும் முதல் விரோதி ஆளுநர் ரவி. நாகலாந்து மக்களை போல தமிழக மக்களும் கிளர்ந்து எழ வேண்டும் என்பதற்காக கையெழுத்து இயக்கத்தை நடத்துகிறோம். இதில் மக்கள் கையெழுத்திட வேண்டும் என வைகோ பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்