அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை… காவேரி மருத்துவமனையில் தொடங்கியது.!
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை தொடங்கியுள்ளது.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சோதனைக்கு அழைத்துச் செல்லும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொண்டதில் இதயத்தில் அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் தனியார் மருத்துவமனைக்கு மாற்றக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டதன் பேரில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 5.15 மணியளவில் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை தொடங்கியுள்ளது. மருத்துவர் ரகுராமன் தலைமையிலான மருத்துவர் குழு அவருக்கு இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துவருகின்றனர். சிகிச்சைக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜி சில நாட்கள் ஓய்வில் இருக்கவேண்டும் எனவும் மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.