கோயில் திருவிழாக்களில் ஆபாச நடனம் – வழக்குப்பதிவு செய்ய உத்தரவு.!
கோவில் திருவிழாக்களின்போது ஆபாச நடனம் ஏற்பாடு செய்தால் பெண் வன்கொடுமை தடை சட்டம் பாயும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது.
கோயில் திருவிழாக்களில் ஆபாச நடன நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் விழா ஏற்பாட்டாளர்கள் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
வன்கொடுமை செய்யும் அளவிற்கு நடனங்கள் இருக்கும்போது சாதாரண வழக்குகளை ஏற்க முடியாது என்று நீதிபதி கூறியுள்ளார். மேலும், வழிபாட்டு தலங்களில் ஆபாச நடனம் நடக்கும்போது போலீஸ் என்ன செய்து கொண்டிருந்தது என்றும் நீதிபதி கடுமையாக சாடியுள்ளார்.
ஏற்கனவே, கோயில் திருவிழாக்களில் ஆபாச நடனம் ஆடுவது குறித்து மதுரை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் குறவன் – குறத்தி என்ற பெயரில் ஆபாச நடனம் ஆடுவதை அனுமதி அளிக்க கூடாது எனவும், அதனை தடுக்க தனி பிரிவு ஒன்றை உருவாக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும், சாதி பாடல்களை ஒலிபரப்பவில்லை என்பதை அரசு உறுதி செய்யவேண்டும் எனவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.