என்னுடைய மறு உருவம் தான் பாஜக… விஜயின் கூற்றை மறுக்க முடியாது – சீமான்
ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என்ற விஜயின் கூற்றை மறுக்க முடியாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து.
சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மத்தியில் கூட்டாட்சி வந்தால் தான் நாட்டில் மாறுதல் ஏற்படும். அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறும் கட்சிக்கு பிரதமர் வாய்ப்பு அளிக்க வேண்டும். நான் என்ன நிலைப்பாடு எடுக்கிறானோ, அதையே பாஜகவும் எடுக்கும், என்னுடைய மறு உருவம் தான் பாஜக. நான் முருகனின் வேல் பற்றி பேசினால் பாஜகவும் வேல் யாத்திரை செல்லும் என விமர்சித்தார்.
மேலும் சீமான் கூறுகையில், தமிழ்நாட்டின் தற்போதைய சூப்பர் ஸ்டார் நடிகரான விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். நடிகர் விஜயின் அப்பாவுக்கு அரசியலுக்கு வர ஆர்வம் இருந்தது. அரசியலுக்கு வருவதால் பெற்றோர் மீது அக்கறை இல்லை என்பது அர்த்தமில்லை. ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என்ற விஜயின் கூற்றை மறுக்க முடியாது.
50 ஆண்டுகளாக தமிழகத்தில் ஓட்டுக்கு பணம் வழங்கப்படுவது தொடர் கதையாக உள்ளது. நாட்டில் மக்கள் பிரச்சனை அதிகமாக உள்ள நிலையில், பல தரப்பிலும் தலைவர்கள் தேவைப்படுகிறார்கள் எனவும் கூறினார்.