தமிழ்நாட்டின் முதல் விரோதி, அரசியல் சட்டத்தின் விரோதி ஆளுநர் ஆர்.என்.ரவி – வைகோ பேச்சு
ஆளுநர் பதவியே இருக்கக்கூடாது, இது ஜனநாயகத்திற்கு விரோதமானது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து.
தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கையெழுத்து இயக்கம் தொடக்க விழா இன்று தொடங்கியது. இன்று முதல் ஒருமாதம் கையெழுத்து இயக்கம் நடத்தி குடியரசு தலைவரை சந்தித்து கோரிக்கை வைக்கவுள்ளனர். வைகோ தலைமையிலான கையெழுத்து இயக்க நிகழ்ச்சியில் மூத்த தலைவர் ஐயா நல்லக்கண்ணு முதல் கையெழுத்திட்டார்.
இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாட்டின் முதல் விரோதி, அரசியல் சட்டத்தின் விரோதி ஆளுநர் ஆர்.என்.ரவி தான். ஆளுநர் பதவியே இருக்கக்கூடாது, இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கப்பட்டால்தான் தமிழ்நாட்டில் ஜனநாயகம் ஜனநாயகமாக இருக்கும். முதல்வரின் அதிகாரத்தை ஆளுநர் பறிக்க முயற்சிப்பது கண்டனத்துக்குரியது. அமைச்சர்கள் நியமனம், இலாகா மாற்றங்கள் குறித்து தீர்மானிக்க வேண்டியது முதல்வரின் அதிகாரமாகும் எனவும் தெரிவித்தார்.