தேர்வு முடிவுகளில் குளறுபடி:மாணவர்கள் தீவிர போராட்டம்.!போலீசாருடன் மோதல்!பாட்னாவில் பரபரப்பு..!
பீகார் மாநிலத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதில், 53 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்த தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பது தெரியவந்தது. சில மாணவர்களுக்கு மொத்த மதிப்பெண்களைவிட கூடுதலாக மதிப்பெண் வழங்கியது, தேர்வு எழுதாத மாணவருக்கு மதிப்பெண் வழங்கியது தெரியவந்ததால் மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
விடைத்தாள்களை மீண்டும் சரிபார்க்க வேண்டும் அல்லது தேர்வு வாரியம் மீண்டும் தேர்வை நடத்த வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மாணவர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்த போலீசார் முயன்றனர். அப்போது மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் மோதல் உருவானது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் கான்பூர் பல்கலைக்கழக மாணவர்களும், தங்கள் தேர்வு முடிவுகளில் முரண்பாடு இருப்பதாக கூறி கல்லூரி வளாகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்கள் விடைத்தாள்களை மறுபடியும் ஆய்வு செய்வதற்கு ஜூன் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.