இந்த நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்ட ஒப்பந்தத்தை திரும்பப் பெற வேண்டும் -அண்ணாமலை

Annamalai IPS

பிஎஸ்டி நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்ட நிதிநுட்ப நகரம் கட்டுமான ஒப்பந்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்று அண்ணாமலை அறிக்கை.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2009 ஆம் ஆண்டு, கடந்த திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்ட நிதிநுட்ப நகரம், தற்போது, பிஎஸ்டி என்ற கட்டுமான நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த 14 ஆண்டுகளாக ஒரு செங்கல் கூட வைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள, திறனற்ற திமுக அரசு தேர்ந்தெடுத்துள்ள பிஎஸ்டி நிறுவனம், தரக்குறைவான கட்டிடங்களைக் கட்டியதாக இதே திமுக ஆட்சியால் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் என்பதுதான் விந்தை.

தரக்குறைவான கட்டிடங்களைக் கட்டியதாக பிஎஸ்டி கட்டுமான நிறுவனத்தின் மீது புகார் வந்ததை அடுத்து, முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைத்த IIT ஆய்வுக்குழு அறிக்கையில், இந்த நிறுவனம் கட்டிய ஏழை மக்களுக்கான குடியிருப்புகளில் செய்யப்பட்டுள்ள பூச்சுவேலை, 90% தரமற்றது என்றும், இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் முதல்வர் கடும் நடவடிக்கை எடுப்பார் என்றும் சட்டசபையில் திமுக அமைச்சர் திரு.தா,மோ.அன்பரசன்  கூறினார். இனிமேல் அரசுப் பணிகள் பிஎஸ்டி நிறுவனத்திற்கு வழங்கப்படாது என, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு சேகர்பாபு ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது, சென்னை நந்தம்பாக்கத்தில் 250 கோடி மதிப்பில் அமையவுள்ள நிதிநுட்ப நகரத்திற்கான கட்டுமானப் பணிக்கு, இதே பிஎஸ்டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது திமுக அரசு. இனிமேல் அரசுப் பணிகளில் பங்கேற்க முடியாது என்று கூறப்பட்ட நிறுவனத்திற்கு, மீண்டும் அரசுப் பணி ஒப்பந்தம் வழங்கி அழகு பார்க்கிறது திமுக அரசு. ஐஐடி ஆய்வறிக்கை என்ன ஆயிற்று? அதன் மேல் திறனற்ற திமுக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

பொதுமக்கள் வரிப்பணத்தை, மக்கள் நலத் திட்டங்களுக்குச் செலவிடாமல், இடையில் யாரோ சம்பாதிக்க, ஏற்கனவே தடை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட நிறுவனத்திற்கு வழங்குவதா? உடனடியாக, பிஎஸ்டி நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்ட நிதிநுட்ப நகரம் கட்டுமான ஒப்பந்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும், அந்த நிறுவனத்தின் மீதான ஆய்வறிக்கையைப் பொதுமக்கள் பார்வைக்கு வைத்து, அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.’ என தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்