மழையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் – அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி!
மழை பாதிப்பு குறித்து 24 மணிநேரமும் கண்காணித்து வருகிறோம் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கனமழையால் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னையில் 27 ஆண்டுகளுக்கு பின்பு ஜூன் மாதத்தில் 3 மடங்கு அதிக மழை பதிவாகி உள்ளது. நாளை முதல் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில், சென்னையில் மழை தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நகராட்சிகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் தயாராக உள்ளனர்.
மழை பாதிப்பு குறித்து 24 மணிநேரமும் கண்காணித்து வருகிறோம். கடந்த மழையின்போது பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக்கில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக எந்த மாவட்டத்திலும் தற்போது வரை சேதம் இல்லை. பருவம் தவறிய மழை மற்றும் திடீர் மழையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் எனவே தெரிவித்தார்.