காலை சிற்றுண்டித் திட்டம்… மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட அமைச்சர் உதயநிதி.!
அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி உணவை ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி, மாணவர்களுடன் அமர்ந்து உணவை சாப்பிட்டார்.
தமிழ்நாட்டில் கடந்த வாரம் ஜூன் 12 ஆம் தேதி கோடை விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட காலை சிற்றுண்டி திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாணவர்கள் பசியுடன் பள்ளிக்கு வரக்கூடாது என்பதற்காக, காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம் காலை உணவு, அரசுப் பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, காலை சிற்றுண்டித் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, திருச்சி அரசு சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளியில் இன்று ஆய்வு செய்தார்.
இது குறித்து அவர் தனது டிவீட்டில், மாணவர்களின் பள்ளி வருகையை அதிகரித்து, ஆரோக்கியத்துடன் கல்வி வழங்குவதை உறுதி செய்ய, முதலமைச்சரின் கனவு திட்டங்களில் ஒன்றான காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுவதை, மாணவச் செல்வங்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட போது, காலை உணவு சிறப்பாக இருப்பதாக மாணவர்கள் கூறியது மன நிறைவையும், மகிழ்ச்சியையும் தந்தது என பதிவிட்டுள்ளார்.
மாணவர்களின் பள்ளி வருகையை அதிகரித்து, உடல்நலத்துடன் கூடிய கல்வியை உறுதி செய்ய, நம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் செயல்படுத்தி வரும் கனவு திட்டங்களில் ஒன்றான காலை சிற்றுண்டித் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, திருச்சி அரசு சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளியில் இன்று… pic.twitter.com/R2WQPzVFHv
— Udhay (@Udhaystalin) June 19, 2023