27 வருடத்திற்கு பின் கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை – வானிலை ஆய்வாளர்.!
27 ஆண்டுகளுக்கு பின் இந்தாண்டு சென்னையில் கனமழை பதிவாகி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வழக்கமாக ஜூன் மாதம், சராசரியாக 5-6 செ.மீ மழை பதிவாகும். ஆனால், இந்தாண்டு ஜூன் மாதம் 13.8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சுமார் 27 ஆண்டுகளுக்கு பின் இந்தாண்டு சென்னையில் கனமழை பதிவாகியுள்ளதாம். அதிகளவாக இன்று சென்னை மீனம்பாக்கத்தில் 16 செ.மீ அளவில் மழை பதிவாகியுள்ளதாம்.
ஆம்….கடந்த 1996ஆம் ஆண்டு 28 செ.மீ மழைப்பதிவாகி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த தகவலை தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். மேலும், ஜூன் 21ஆம் தேதிக்கு பின் பருவ மழை தீவிரமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவு முதல் கொட்டி தீர்க்கும் கனமழையால் சென்னை மக்கள் ஸ்தம்பித்துள்ளனர். மேலும், கனமழை எதிரொலியாக இன்று சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
அவசர எண்:
சென்னையில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியிருந்தாலோ, மரம் முறிந்திருந்தாலோ 1913 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.