என்னுடைய கனவு இதுதான்! ஒரு தொகுதிக்கு 15 கோடி செலவாகும்… விஜய் கொடுத்த அரசியல் அட்வைஸ்!
உங்கள் பெற்றோரிடம் காசு வாங்கி கொண்டு ஓட்டு போட வேண்டாம் என்று சொல்லுங்கள் என மாணவர்களிடையே நடிகர் விஜய் பேச்சு.
நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பாக தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதிகளில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசு தொகை வழங்கும் விழா சென்னை நீங்காலங்கரையில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில், மாணவர்களுக்கு நடிகர் விஜய் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்து வருகிறார்.
இதனிடையே, இவ்விழாவில் பேசிய நடிகர் விஜய், கல்வி குறித்தும், எதிர்காலம் குறித்து பேசிய மாணவர்களை ஊக்குவித்தார். மேலும், இதில் சில அரசியல் தொடர்பாகவும் பேசியும் இருந்தார். குறிப்பாக ஓட்டுக்கு பணம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதாவது விஜய் கூறுகையில், நாளைய இளம் வாக்காளர்களே, நீங்கள் தான் நல்ல தலைவர்களை தேர்வு செய்ய வேண்டும். ஏனென்றால், நீங்கள் தான் வரும் வருடங்களில் வாக்களிக்க உள்ளீர்கள்.
நமது கையை வைத்து நம் கண்ணையே குத்தும் நிலை தான் நடக்கிறது. காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவதை தான் நான் குறிப்பிடுகிறேன். ஒருவருக்கும் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் ஒரு தொகுதிக்கு சுமார் 15 கோடி ரூபாய் செலவாகும். அப்படி என்றால் அந்த 15 கோடியை அவர்கள் முன்னாடியே எப்படி சம்பாதித்து இருப்பார்கள் என்பதை நீங்கள் யோசிக்க வேண்டும். இனி காசு வாங்கி ஓட்டு போட வேண்டாம் என்று உங்கள் அம்மா அப்பாவிடம் சொல்லுங்கள் என அறிவுறுத்தினார்.
மேலும், என்னுடைய கனவு எல்லாம் சினிமா, நடிப்பு தான், அதைநோக்கி தான் செல்கிறது, ஒரு வேல என்று கூறி அது இப்போ வேண்டாம் என சொல்லிவிட்டார். சினிமா நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொண்டாலும், இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பது இதுவே முதல்முறை என்றார்.
தேர்வில் வெற்றி பெறாத மாணவர்களை சக மாணவர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். கல்விதான் யாரிடமும் இருந்து பறிக்க முடியாத சொத்து, தனிப்பட்ட அடையாளத்தை எக்காரணம் கொண்டும் விட்டு கொடுக்காதீர்கள் என்றும் அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களை பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் எனவும் மாணவர்களிடையே தெரிவித்தார்.