ஜப்பானில் பாலியல் உறவுக்கான வயது 16ஆக உயர்வு.!
ஜப்பான் நாடு, பாலியல் குற்றச்சட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ ஒப்புதல் வயது 13ல் இருந்து 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
உலகிலேயே மிகக் குறைந்த சட்டப்பூர்வ பாலியல் ஒப்புதல் வயது ஜப்பானில் தான் இருந்து வந்தது. இதன் காரணமாக குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வந்த நிலையில், தற்போது வயது வரம்பை ஜப்பான் அரசு உயர்த்தியுள்ளது.
ஜப்பான் பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட இந்த புதிய சீர்திருத்தம் ஒரு நூற்றாண்டுக்கும் மேலான காத்திருப்புக்குப் பிறகு வந்துள்ளது. கடைசியாக 1907-ல் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய சட்டத்தின் கீழ், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் நோக்கத்திற்காக மயக்கி, மிரட்டி அல்லது பணத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனை அல்லது கிட்டத்தட்ட ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
மேலும், 16 வயது கீழ் உள்ளவர்களை அனுமதியின்றி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும். அதாவது ஒருவரின் சம்மதத்தின் வயதுக்கு கீழே எந்தவொரு பாலியல் செயல்பாடும் கற்பழிப்பாகக் கருதப்படுகிறது.
சரியான காரணமின்றி, அந்தரங்க உறுப்புகள், உள்ளாடைகள் அல்லது அநாகரீகமான செயல்களை ரகசியமாக படம்பிடித்தது நிரூபிக்கப்பட்டால், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 18 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.