குஜராத்தை புரட்டிப்போட்ட பிபார்ஜாய்…இருளில் மூழ்கிய 1000 கிராமங்கள்!
10 நாட்களுக்கும் மேலாக அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த பிபார்ஜாய் புயல் நேற்றுமுன் தினம் மாலை 4.30 மணியளவில், குஜராத்தின் ஜகாவு துறைமுகம் அருகே கரையை கடக்க தொடங்கியது.
புயல் கரையை கடந்த பின்னரும், வலுவிலக்காமல் ராஜஸ்தானை நோக்கி நகர்வதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தெற்கு ராஜஸ்தான் பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது, குஜராத்தின் கட்ச் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்தன.
புயல் கரையை கடந்தபோது 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதால் ஏராளமான குடிசைகள் அடித்துச்செல்லப்பட்டன. ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சரிந்ததால் 1000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளது.
தொடர் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பலர் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் காற்று வேகமாக வீசுவதால் கடலோர மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று புஜ் மாவட்ட காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.