ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு…!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 6-ந் தேதி மராட்டிய சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின்போது மகாத்மா காந்தி கொலைக்கு ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம் என குற்றம்சாட்டினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ஒருவர் தானே மாவட்டம் பிவண்டியில் உள்ள கோர்ட்டில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
கடந்த ஏப்ரல் 23-ந் தேதி பிவண்டி கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ராகுல் காந்தி ஆஜராகவில்லை. இந்தநிலையில் மே மாதம் 2-ந் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் ராகுல்காந்தி கோர்ட்டில் ஆஜராகவில்லை. அவர் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் ஆஜராகவில்லை என அவரது வக்கீ்ல்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஜூன் 12-ந் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்நிலையில் கோரேகாவ் பகுதியில் உள்ள கண்காட்சி மையத்தில் நடக்கும் கட்சிக்கூட்டத்தில் கலந்து கொள்ள ராகுல்காந்தி இன்று மும்பைக்கு வருகை தரவிருக்கிறார். இதனிடையே ஆர் எஸ் எஸ் அமைப்பினர் தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக காலை 11 மணி அளவில் பிவண்டி கோர்ட்டில் அவர் நேரில் ஆஜராவார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.