பாஜகவை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்!

dmk alliance

கோவையில், பாஜகவை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்.

பாஜகவின் ஜனநாயக விரோத, மக்கள் விரோத, பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கண்டித்து கோவை மாநகர், சிவானந்தா காலனியில் இன்று மாலை 5 மணி அளவில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.

அந்த அறிக்கையில், கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் – மக்கள் விரோத ஆட்சியை கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடத்திக் கொண்டு இருக்கிறது மத்திய பாஜக அரசு. பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் மக்களுக்குக் கொடுத்தது அனைத்தும் கண்ணீரும் அடக்குமுறைகளும் தான்.

இத்தகைய சூழலில் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது பாஜக தலைமை. மாநிலங்களில் நடந்த பல்வேறு சட்டமன்றத் தேர்தல்களில் வரிசையாகத் தோற்று வருவதும்,நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் காட்டி வரும் எதிர்ப்பும் சேர்ந்து எந்தச் செல்வாக்கும் இல்லாத அரசாங்கமாக ஒன்பதாவது ஆண்டில் மொத்தமாகத் தேய்ந்துவிட்டது பாஜக ஆட்சி.

எனவே, நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியை விட்டு இறங்குவது மட்டுமல்ல, எதிர்பாராத படுதோல்வியை அடையப் போகிறோம் என்பதை பாஜக தலைமை உணர்ந்துவிட்டது. எனவே, தனக்கு எதிரான ஜனநாயக சக்திகளின் பலத்தைக் குறைப்பதன் மூலமாக வெற்றியை அடையலாமா என்ற இறுதித் தந்திரத்துக்குள் பாஜக தலைமை இறங்கி உள்ளது.

இந்தியா முழுமைக்கும் பாஜகவுக்கு எதிரான அரசியல் ஜனநாயக சக்திகளின் அணிச் சேர்க்கைக்கான நாளாக ஜூன் 23-ஆம் தேதி குறிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் மதவாத, எதேச்சதிகார அரசியலை வேரறுக்கும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையைச் சீர்குலைக்கவும், கட்சிகளின் உறுதியைக் குலைக்கவும் முயற்சிகள் எடுக்கிறது. அதனை அடையாளமாக பல்வேறு மாநிலங்களில் விசாரணை அமைப்புகளின் மூலமாக பாஜக பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

அந்தவகையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை நேற்றைய தினம் 17 மணி நேரம் விசாரணை என்ற பெயரால் சித்திரவதை செய்துள்ளார்கள். நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இதயச் சிகிச்சை செய்ய வேண்டிய அளவுக்கு நெருக்கடியை உண்டாக்கி விட்டார்கள். விசாரணைக்கு அமைதியாக ஒத்துழைப்புத் தந்தவரையே இந்தளவுக்கு வேண்டுமென்றே தொல்லையையும், நெருக்கடியையும் கொடுத்திருப்பது பழிவாங்குவதே தவிர, விசாரணை அல்ல.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியை – அதுவும் அமைச்சரைச் சித்திரவதை செய்வதன் மூலமாக அச்சுறுத்துவது அரசியலே தவிர, விசாரணை அல்ல. மேலும், தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்துக்குள் மத்திய பாதுகாப்புப் படைப் போலீசாரை அழைத்து வருவது தான் மாநில ஆட்சியின் மாண்பைக் காக்கும் முறையா? இதன் மூலமாக எங்கும், எப்போதும் நுழைந்து எதையும் செய்வோம் என்ற ஆணவ போக்கே தெரிகிறது. எச்சரிக்கை விடுக்கிறார்களா? மிரட்டுகிறார்களா? இவை எதற்கும் பயப்படுபவர்கள் நாங்கள் அல்ல, எனவே, இதனை கண்டித்து இன்று மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்