அமெரிக்க அதிபர் டிரம்புடனான பேச்சுவார்த்தை சமாதானத்திற்கு வழிவகுக்கும் என நம்புகிறேன் !வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்
அமெரிக்கா மற்றும் வடகொரியா அதிபர்கள் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு உலகமே ஆவலோடு உற்று நோக்கி காத்திருந்த நிலையில் நடைபெற்றுள்ளது..ஞாயிற்றுக்கிழமை பகலில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சிங்கப்பூர் வந்தடைந்தார். அதேநாள் இரவு அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் சிங்கப்பூர் வந்து சேர்ந்தார்.
இருவரும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிங்கப்பூரில் வெவ்வேறு இடங்களில் தங்கியிருந்தனர். இவர்களது சந்திப்பிற்காக, சென்டோசா தீவு மிகுந்த நேர்த்தியுடன் தயாரானது. இதனைத் தொடர்ந்து, இன்று காலை தாங்கள் தங்கியிருந்த ஹோட்டல்களில் இருந்து, கிம் ஜாங் உன்னும், டொனால்டு டிரம்பும், சென்டோசா தீவு நோக்கி பயணமாகினர். முதலில், பலத்த பாதுகாப்புடன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சென்டோசா தீவை வந்தடைந்தார். பாதுகாப்பு காரணங்களுக்கான, எந்த காரில் டிரம்ப் செல்கிறார் என்பது தெரியாத இருப்பதற்காக, ஒரே மாதிரியான ஒன்றுக்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுத்தன.
இதேபோல், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும், தான் தங்கியிருந்த இடத்தில் இருந்து சென்டோசா தீவிற்கு, பலத்த பாதுகாப்புடன், ஏராளமான கார்கள் அணிவகுக்க, பயணமானார்.
இருநாட்டு அதிபர்களும் சென்டோசா தீவை வந்தடைந்த நிலையில், அங்குள்ள கேபெல்லா ஓட்டலில், இந்திய நேரப்படி காலை 6.30 மணியளவில் பேச்சுவார்த்தை தொடங்கியது. அனைத்து நாட்டு தொலைக்காட்சிகளும், இந்த சந்திப்பை நேரலையில் தொகுத்து வழங்கின. முதலில், இரண்டு வெவ்வெறு அறைகளிலிருந்து வெளிப்பட்ட இருவரும், நேர்த்தியாக வைக்கப்பட்ட இரண்டு நாட்டு கொடிகள் முன்னிலையில், பரஸ்பரம் கைகுலுக்கிய வண்ணம் போஸ் கொடுத்தனர்…
இதனைத் தொடர்ந்து, இருவரும் செய்தியாளர்களை சந்திக்கும் வண்ணம், பிரதான பகுதியிலிருந்து, அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறைக்கு, அளவளாவியபடியே நடந்து சென்றனர். அங்கு ஒரே இருக்கையில் அமர்ந்து, பன்னாட்டுச் செய்தியாளர்கள் சந்திப்பை நிகழ்த்தினர்..
அப்போது பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியா அதிபருடனான இன்றைய பேச்சுவார்த்தையில், தமக்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்தார். கிம் ஜோங் உன்னுடனான சந்திப்பு என்பது, அமெரிக்க வரலாற்றில் மாபெரும் வெற்றி என்று வர்ணித்தார்.
அணுஆயுத ஒழிப்பு விவகாரத்தில் வடகொரியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுடனான பேச்சுவார்த்தை மிகவும் நன்றாக அமைந்தது என்றும் கூறியுள்ளார்.மிகப்பெரும் பிரச்னை, மிகப்பெரிய சிக்கலுக்கு தீர்வு காணப்படும்.அணுஆயுத பிரச்னை, வடகொரியா மீது பொருளாதார தடை தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், அமெரிக்க அதிபரின் கருத்திற்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.பேச்சுவார்த்தை சமாதானத்திற்கு வழிவகுக்கும் என நம்புகிறேன் என்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.