அடுத்தடுத்து இந்திய அணியில் நிகழப்போகும் மாற்றங்கள்… சாம்சன், ஜெய்ஸ்வால்-க்கு இடம்.!
இந்திய டெஸ்ட் அணியில் புஜாராவுக்கு பதிலாக ஐபிஎல் தொடரில் கலக்கிய ஜெய்ஸ்வால் இடம்பெறுவதாக தகவல்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்விக்கு பிறகு இந்திய அணியில் அதிரடியாக சில மாற்றங்கள் நிகழப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் மேற்கு இந்திய தீவுகளுக்கு மேற்கொள்ளவுள்ள இந்திய அணியின் சுற்றுப்பயணத்தில் சில மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம்.
இந்திய அணி வரும் ஜூலை 12 முதல் ஆகஸ்ட் 13 வரை மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் டெஸ்ட் போட்டிகளில் இந்த ஆண்டு தொடர்ச்சியாக சொதப்பிவரும் புஜாராவுக்கு பதிலாக ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம்பெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஜெய்ஸ்வால் ஏற்கனவே உலக டெஸ்ட் இறுதிப்போட்டியில் ரிசர்வ் வீரராக அணியில் இடம்பெற்றிருந்தார். அதேபோல் டெஸ்ட் அணியில் இடம்பெற்ற முகமது ஷமிக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசியக்கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடர் வரவிருப்பதால் முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அதிகமாக ஓரங்கட்டப்பட்டு வந்த சஞ்சு சாம்சனுக்கு ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் மற்றும் கே.எல்.ராகுல் காயம் அடைந்துள்ளதால் சாம்சன் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இடம்பெறலாம் என்றும் கூறப்படுகிறது.
மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஜூலை 12 இலும், ஒருநாள் தொடர் ஜூலை 27 இலும், டி-20 தொடர் ஆகஸ்ட் 3 இலும் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும்.