செந்தில் பாலாஜியை காணொலியில் ஆஜர்படுத்த முடிவு!
கைது நடவடிக்கையில் நடந்த விவரங்கள் தொடர்பாக செந்தில் பாலாஜியிடம் காணொலி வாயிலாக கேட்டறிய உள்ளார் நீதிபதி அல்லி.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, இரண்டாவது நாளாக இன்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த முடியாத சூழல் உள்ளதால், காணொலியில் ஆஜர்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவின்படி, செந்தில் பாலாஜியிடம் காணொளி மூலம் விசாரணை நடைபெற உள்ளது. அதன்படி, செந்தில் பாலாஜியை காணொளியில் ஆஜர்படுத்த நீதிமன்றம் அனுப்பிய அதிகாரிகள் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.
கைது நடவடிக்கையில் நடந்த விவரங்கள் தொடர்பாக செந்தில் பாலாஜியிடம் காணொலி வாயிலாக கேட்டறிய உள்ளார் நீதிபதி அல்லி. செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கோரிய வழக்கு தொடர்பாக காணொலியில் விசாரணை நடக்க உள்ளது. அதன்படி, காணொலி காட்சி வாயிலாக செந்தில் பாலாஜியை விசாரிப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளது.