கிரீஸ் அருகே அகதிகள் படகு கவிழ்ந்த விபத்தில் 78 பேர் உயிரிழப்பு.!
கிரீஸ் நாட்டில் பயங்கர விபத்து நடந்துள்ளது. சட்டவிரோதமாக குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற படகு கடலில் மூழ்கியதில் 78 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படகில் 700-750 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது.
பெலோபொன்னீஸ் கடற்கரையிலிருந்து பைலோஸுக்கு தென்மேற்கே 47 கடல் மைல் (87 கிமீ) தொலைவில் சர்வதேச கடல் பகுதியில் இந்த கப்பல் மூழ்கியதாக கூறப்படுகிறது. இந்த இடம் மத்தியதரைக் கடலின் ஆழமான பகுதிகளில் ஒன்றாகும்.
மீட்பு நடவடிக்கையாக, ஆறு கடலோர காவல்படை கப்பல்கள், ஒரு கடற்படை போர் கப்பல், ஒரு இராணுவ போக்குவரத்து மற்றும் ஒரு விமானப்படை ஹெலிகாப்டர், அத்துடன் பல தனியார் கப்பல்கள் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இதுவரை 100 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த படகு கிழக்கு லிபியாவில் உள்ள டோப்ரூக்கில் இருந்து புறப்பட்டதாக கூறப்படுகிறது.