பழி வாங்கும் வேட்கையில் பாஜக…! எந்த மிரட்டலுக்கும் பயப்படாத இயக்கம் திமுக – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கை ஜனநாயக படுகொலை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.
ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி நேரில் சென்று அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து, அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கை ஜனநாயக படுகொலை. எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதன் உச்சம் தான் செந்தில் பாலாஜி கைது. செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையில் எந்த சட்ட நடைமுறையும் பின்பற்றப்படவில்லை. செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் துன்புறுத்தி உள்ளனர்.
விசாரணையின் போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மனிதாபிமானமற்ற முறையில் 18 மணி நேரம் உணவு கொடுக்காமல், அவரை கீழே தள்ளி டார்ச்சர் செய்துள்ளனர். ஒரு தனி நபரின் பகை மற்றும் கொள்கை பகை ஆகியவை காரணமாக செந்தில் பாலாஜி கைது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படுத்த பாஜக முயற்சி செய்கிறது. சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை கொண்டு பாஜக அச்சுறுத்தி வருகிறது. கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜியின் வலிமையை குறைக்க பாஜக முயற்சி மேற்கொள்கிறது.
வரும் 23ம் தேதி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டம் நடத்த உள்ளதால் பாஜகவுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாஜக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் விசாரணை அமைப்புகளை ஏவி வருகிறது. பாஜக தேச நலனுக்காக உருவாக்கப்பட்ட அமைப்புகளை சுயநலனுக்காக பயன்படுத்துகிறது.
செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஈபிஎஸ்-யின் பேச்சு முன்னுக்குபின் முரணாக உள்ளது. செந்தில் பாலாஜி கைது குறித்து பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியில்லை. ஆட்சி மீது குற்றம்சாட்ட ஏதும் இல்லாததால் செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கையை காரணமாக்கி களங்கம் கற்பிக்க முயற்சி. அதிமுக ஆட்சியில் தலைமைச் செயலகத்தில் சோதனை நடந்த போது ஈபிஎஸ், ஓபிஎஸ் கண்டிக்கவில்லை. அதிமுக ஆட்சியில் தலைமை செயலகத்தில் சோதனை நடத்தியதை தமிழகத்திற்கு தலைகுனிவு என கண்டித்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தி.மு.க-வை ஊழல் நிறைந்த இயக்கமாக காட்ட பல முயற்சிகள் நடந்துள்ளது. அவை எல்லாம் தோற்றுப் போனது என்பதுதான் வரலாறு. அதேபோல இதுவும் தோற்றுப் போகும். அரவக்குறிச்சியில் தான் தோற்க செந்தில் பாலாஜியே காரணம் என அண்ணாமலை நினைக்கிறார். முதல்வர் ஸ்டாலின், மக்களவைத் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டி வருவதால், திமுகவை மிரட்ட இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறது பாஜக அரசு.
கொங்கு மண்டலத்தில் பாஜகவின் வாக்குகளை சிதறடித்தவர் செந்தில் பாலாஜி. 2024 தேர்தல் அவர் போட்டியிட்டால், நோட்டாவைவிட மோசமான நிலை ஏற்படும் என அஞ்சி பாஜக இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறது. எந்த மிரட்டலுக்கும் பயப்படாத இயக்கம் திமுக. உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் போது டிராமா என கூறுவது சரியானது அல்ல.
பாஜக அச்சுறுத்தல் குறித்து எதிர்க்கட்சிகள் அஞ்சாமல் கூடுதல் வேகத்துடன் செயல்படும். எதிர்க்கட்சிகள் மீது களங்கம் ஏற்படுத்துவது மட்டுமே பாஜகவின் நோக்கம் மற்றும் குறிக்கோளாக உள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக விசாரணை அமைப்புகளை நாடும் முழுவதும் பயன்படுத்தி வருகிறது.
இபிஎஸ் மீது ஊழல், கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. வேலுமணி, தங்கமணி மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. டெண்டர் முறைகேடு, எல்இடி விளக்குகள் முறைகேடு என இபிஎஸ் அதிமுகவினர் ஊழல் செய்துள்ளனர். செந்தில் பாலாஜி பற்றி பேசும் முன் எடப்பாடி பழனிசாமி கண்ணாடியை பார்க்க வேண்டும். கற்பனையில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிமுக ஊழல் செய்துள்ளது என குற்றம்சாட்டியுள்ளார்.