செந்தில் பாலாஜி என்ன தியாகியா? வழக்கை திசை திருப்பவே முயற்சி – சிவி சண்முகம்
செந்தில் பாலாஜியை புனிதர் போல் சித்தரித்து இந்த வழக்கை திசை திருப்ப திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முயற்சி.
அமைச்சர் செந்தில் பாலாஜி என்ன தியாகியா? என அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், செந்தில் பாலாஜி சுதந்திரத்திற்காக பாடுபட்டது போல் சித்தரிக்க முயற்சி செய்து வருகின்றனர்.
செந்தில் பாலாஜி என்னமோ நாட்டுக்காக போராடியதுபோல் திமுகவினர் பேட்டி அளித்து வருகின்றனர். 2 ஆண்டுகளாக அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரத்தை பயன்படுத்தி பணம் சேர்த்தது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். எனவே, செந்தில் பாலாஜியை புனிதர் போல் சித்தரித்து இந்த வழக்கை திசை திருப்ப திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் முயற்சிக்கின்றனர் என கூறியுள்ளார்.
சமீபத்தில் வருமான வரித்துறை பெண் அதிகாரி தாக்கப்பட்ட போது, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எங்கே சென்றார்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தி எதிர்ப்பு போராட்டம் காரணமாகவே செந்தில் பாலாஜி கைதானார் என்று அவரை சுதந்திர போராட்ட வீரர் போல் காட்ட முயற்சிக்கிறார்கள் எனவும் விமர்சித்தார்.
இதற்குமுன் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கையை தடுப்பது சரியல்ல, டாஸ்மாக் கடைகளில் நிகழ்ந்த முறைகேடால் கிடைத்த பணம் ஒரே குடும்பத்திற்கு சென்றுள்ளது. இதற்கு செந்தில் பாலாஜியே காரணம். சோதனைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறிய அவர் கைதாவதில் என்ன பிரச்சனை என கேள்வி எழுப்பியிருந்தார்.
எய்ம்ஸ் மருத்துவர்களை அழைத்து வந்து செந்தில் பாலாஜியை பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை உடனடியாக முதல்வர் நீக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இதன்பின், பேசிய அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை தன் கடமையை செய்துள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி கைதால் முதலமைச்சர், அமைச்சர்கள் பதறி போயுள்ளனர். ரூ.30 ஆயிரம் கோடி குறித்து அமலாக்கத்துறையிடம் செந்தில் பாலாஜி வாய் திறந்துவிட்டால், தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை வந்துவிடுமோ என்ற அச்சத்தில் செந்தில் பாலாஜியை ஓடிஓடி போய் பார்த்து வருகிறார்கள் என விமர்சித்திருந்தார்.