உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் தான் கைது… அரசியல் பழிவாங்கல் இல்லை… அண்ணாமலை.!
செந்தில் பாலாஜி மீதான கைது, உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் நடவடிக்கை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து.
அமலாக்கத்துறையின் 18 மணிநேர சோதனைக்கு பிறகு, இன்று அதிகாலை தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். விசாரணைக்கு செல்லும்போது நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் பேரில் தான் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி மீது, போக்குவரத்து துறையில் வேலைவாங்கி தருவதாக கூறி பணம் வாங்கிய மோசடி வழக்கு இருக்கிறது.
இத்தனை வழக்குகள் அவர் மீது உள்ளபோது இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி எப்படி வந்தது என முதல்வர் ஸ்டாலினுக்கு, அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார். இதே முதல்வர் தான் அன்று 2016இல் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது இதே வழக்கில் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், வருமானவரித்துறை என்பது மத்திய அரசின் கீழ் இருந்தாலும் தனிச்சட்டங்களை உள்ளடக்கியது என்று கூறியிருந்தார்.
ஆனால் இன்று அமலாக்கத்துறை எதற்கு அரசியல் காரணங்களுக்காக கைது செய்யவேண்டும், இதனால் சட்டத்தை மதித்து முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றிருந்தால் அமலாக்கத்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
அமலாக்கத்துறை ஆதாரங்கள் அடிப்படையில் தான் தங்கள் கடமையை செய்துள்ளது. இதில் எந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இல்லை. இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இருப்பதாக உச்சநீதிமன்றம் உறுதி செய்திருந்தது. அதன் அடிப்படையில் தான் கைது நடவடிக்கையே தவிர பழிவாங்கும் நடவடிக்கை இல்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.