2 மணிநேரத்துக்கு அனுமதியில்லை! அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை பரிசோதனை தொடங்கியது!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை நடப்பதால் 2 மணி நேரத்துக்கு யாரும் பார்க்க அனுமதி இல்லை.
அமலாக்கத்துறையால் கைது செய்யயப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சமயத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இன்று பிற்பகலில் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யப்படும் எனவும் கூறப்பட்டது. இசிஜியில் மாறுபாடு இருந்ததால், இதய ரத்த நாளத்தில் அடைப்பு இருக்கிறதா என சோதிக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை தொடங்கியுள்ளது. ஆஞ்சியோகிராம் பரிசோதனை நடப்பதால் அமைச்சர் செந்தில் பாலாஜியை 2 மணி நேரத்துக்கு யாரும் பார்க்க அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து, முதலமைச்சர் முக ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.