அமைச்சர் கைது : மத்திய அரசின் அரசியல் நிகழ்வை மக்கள் புரிந்துகொள்வார்கள்.! அமைச்சர் பொன்முடி கண்டனம்.!
அரசியலுக்காக மத்திய அரசு செய்யும் நிகழ்வை மக்கள் புரிந்துகொள்வார்கள் என அமைச்சர் பொன்முடி கண்டனம்.
அமலாக்கத்துறையினர் சோதனைக்கு பிறகு இன்று அதிகாலை தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் தற்போது நெஞ்சுவலி காரணமாக, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த கைது நடவடிக்கை குறித்து திமுக அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், பிற மாநில முதல்வர்கள் என பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், பாஜக ஆட்சி இல்லாத மாநிலத்தில் உள்ள மாநில கட்சியினரை தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. டெல்லி, கர்நாடகா, மேற்கு வங்க மாநிலங்களை தொடர்ந்து , தமிழகத்திலும் இந்த நடவடிக்கைகள் தொடர்கிறது என கூறினார். மேலும், இதற்கெல்லாம் தமிழக முதல்வர் அஞ்சுபபவர் அல்ல. தளபதியையே மிசா வழக்கு போட்டு கைது செய்த சம்பவம் நடந்துள்ளது. மத்திய அரசு செய்யும் பழிவாங்குதல் அரசியல் நிகழ்வுகளை மக்கள் புரிந்து கொண்டார்கள். இனி என்ன நடக்கும் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.