கைதாவதில் செந்தில் பாலாஜிக்கு என்ன பிரச்சனை? முதலமைச்சர் பாதுகாப்பது ஏன்? – ஜெயக்குமார் பேட்டி!
டாஸ்மாக் ஊழலால் கிடைத்த பணம் ஒரே குடும்பத்திற்கு சென்றுள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.
அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு நள்ளிரவு கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைதை தொடர்ந்து தமிழகத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு திமுக அமைச்சர்கள், எதிர்க்கட்சிகள் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கையை தடுப்பது சரியல்ல, அரசுக்கு கிடைக்க வேண்டிய பணம், ஒரு குடும்பத்திற்கு செல்ல செந்தில் பாலாஜியே காரணம். டாஸ்மாக் கடைகளில் நிகழ்ந்த முறைகேடால் கிடைத்த பணம் ஒரே குடும்பத்திற்கு சென்றுள்ளது. சட்டவிரோத மதுபான பார்கள் மூலம் ரூ.2 ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளது என்றும் சட்டவிரோத மதுவிற்பனையால் அரசின் கருவூலத்திற்கு வருவாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் குற்றசாட்டியுள்ளார்.
மேலும், சோதனைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறிய செந்தில் பாலாஜிக்கு கைதாவதில் என்ன பிரச்சனை என கேள்வி எழுப்பினார். எய்ம்ஸ் மருத்துவர்களை அழைத்து வந்து செந்தில் பாலாஜியை பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதன்பின் பேசிய ஜெயக்குமார், அதிமுக ஆட்சியின்போது தலைமை செயலகத்தில் நடந்த சோதனையை நியாயப்படுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் பேசிய வீடியோவை சுட்டிக்காட்டி பேசினார். எனவே, அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை உடனடியாக முதல்வர் நீக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அமலாக்கத்துறை தனது கடமையை செய்யும் நிலையில், அதை தடுக்க நினைப்பது ஏன்?, அமலாக்கத்துறையின் விசாரணையில் உள்ள செந்தில் பாலாஜியை அமைச்சர்கள் சந்திக்க அனுமதிப்பது ஏன்? செந்தில் பாலாஜி மீது ஏராளமான புகார் கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தற்போது அவரை பாதுகாப்பது ஏன்? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.