செந்தில் பாலாஜி ICU-ல் சுய நினைவில்லாமல் இருக்கிறார் – அமைச்சர் சேகர்பாபு பேட்டி!
அமைச்சர் செந்தில் பாலாஜி ICU-வில் சுய நினைவில்லாமல் உள்ளார், அவரது காது பக்கத்தில் வீக்கம் இருந்தது என அமைச்சர் சேகர் பாபு பேட்டி.
தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜின் வீடு, தலைமை செயலக அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சுமார் 18 மணிநேரம் சோதனை நடத்தி பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக கைது செய்து அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
தற்போது அவர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை, ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, எ.வ.வேலு, ரகுபதி ஆகியோர் வருகை தந்தனர்.
அப்போது, செந்தில் பாலாஜியின் உடல் நலம் விசாரித்து விட்டு செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர் செந்தில் பாலாஜி ICU-வில் சுய நினைவில்லாமல் உள்ளார். நான்கு ஐந்து முறை பெயர் சொல்லி அழைத்தபோதும் அவர் கண் திறந்து பார்க்கவில்லை, அவர் காது அருகே வீக்கம் உள்ளது. நிச்சயமாக துன்புறுத்தப்பட்டிருப்பார், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார். மேலும் அவர் பேசுகையில் இந்த சலசலப்புக்கெல்லாம் திமுக அஞ்சாது. இது போன்ற பல சோதனைகளை திமுக பார்த்துள்ளது, பயம் கிடையாது என்று பேசியுள்ளார்.
இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.