பிரதமரின் அமெரிக்க பயணம்… இந்தியா-அமெரிக்க உறவை உறுதிப்படுத்தும்-ஆண்டனி பிளிங்கன்.!
மோடியின் அமெரிக்க பயணம் இந்திய-அமெரிக்க உறவை வலுப்படுத்தும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஜூன் 21 ஆம் தேதி அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவிற்கு செல்ல இருக்கிறார், இந்த பயணத்திற்கு இன்னும் ஒருவாரம் மட்டுமே உள்ள நிலையில், மோடியின் இந்த வரலாற்று சிறப்புமிக்க பயணம் 21 ஆம் நூற்றாண்டின் இந்திய-அமெரிக்க உறவை மேலும் வலுப்படுத்தும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
சுதந்திரமான,வெளிப்படையான, பாதுகாப்பான மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பகுதியை உருவாக்குவதற்கான இந்தியாவின் சிறந்த தலைமையை தான் கண்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் ஜில் பிடன் ஆகியோர் அளிக்கும் அரசு விருந்திலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
280 க்கும் மேற்பட்டவர்களின் உயிரைப் பறித்த பாலசோர் ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு அமெரிக்காவின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என பிளிங்கன் கூறினார். பிரதமர் மோடியின் வருகை குறித்து தாங்கள் எதிர்பார்த்து கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து கூறுகையில், அமெரிக்க காங்கிரஸில் இரண்டு முறை உரையாற்றப்போகும் ஒரே இந்திய தலைவர் பிரதமர் மோடி ஆவார். மேலும் சுதந்திர வரலாற்றில் அமெரிக்க அதிபரின் அரசு முறை பயணத்தின் கௌரவத்தைப் பெறும் மூன்றாவது இந்தியத் தலைவர் பிரதமர் மோடி குறிப்பிடத்தக்கது.