கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை…? அண்ணாமலைக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

ops

வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசுவதை இனி வருங்காலங்களில் திரு. அண்ணாமலை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் ஓபிஎஸ் அறிக்கை. 

அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுக ஒரு ஊழல் கட்சி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஊழலுக்காக சட்டத்தால் தண்டிக்கப்பட்டவர். அதனால் தமிழ்நாடு ஊழல் மாநிலம் என பேட்டியளித்திருந்தார்.

அதிமுக தரப்பில் அண்ணாமலையின் கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், ஓபிஎஸ் அவர்கள் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், அகில உலகத் தமிழர்கள் போற்றும் ஒப்பற்ற ஒரே அரசியல் தலைவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பற்றியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியைப் பற்றியும் தரக்குறைவாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் திரு. கே. அண்ணாமலை அவர்கள் விமர்சித்துள்ளது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.

மறைந்தாலும் மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் ஒப்பற்ற தலைவரை, இந்தியத் திருநாடே வியந்து பார்த்த வீரம் மிக்க தலைவரை, பாரதி கண்ட புதுமைப் பெண்ணாம் புரட்சித் தலைவி அம்மா அவர்களையும், அவருடைய ஆட்சியையும் தரக்குறைவாக திரு. அண்ணாமலை அவர்கள் விமர்சித்திருப்பது கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.

மாண்புமிகு அம்மா அவர்களின் 1991-1996 முடிவடைந்தவுடன், மாண்புமிகு அம்மா அவர்களை அரசியலிலிருந்து ஓரம் கட்ட ஆண்டு ஆட்சி வேண்டும் என்ற தீயநோக்கத்தின் அடிப்படையில் முன்னாள் முதல்வர் திரு. மு. கருணாநிதி அவர்களால் பொய் வழக்குகள் பல புனையப்பட்டன. அனைத்து வழக்குகளிலிருந்தும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர் மாண்புமிகு அம்மா அவர்கள். மாண்புமிகு அம்மா அவர்கள் இந்த மண்ணை விட்டு விண்ணுலகத்திற்கு சென்றபோது அவர்மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. அவர் நிரபராதியாகத்தான் இந்த மண்ணை விட்டுச் சென்றார்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சிக் காலம் தமிழ்நாட்டின் பொற்காலம். உண்மையை உணராமல், மனம் போன போக்கில், வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசுவதை இனி வருங்காலங்களில் திரு. அண்ணாமலை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.’ என  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்