கோவின் செயலி பாதுகாப்பானது! வெளிவரும் செய்திகள் ஆதாரமற்றவை – மத்திய அரசு
தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகள் ஆதாரமற்றவை என கோவின் செயலி குறித்து மத்திய அரசு விளக்கம்.
கொரோனா நோய் தொற்றை தடுக்கும் வகையில் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் விபரங்கள் மத்திய அரசின் கோவின் தளத்தில் பதிவேற்றி வருகின்றனர். கோவின் செயலி மூலம் தடுப்பூசி குறித்த விவரங்கள் மற்றும் அருகாமையில் உள்ள தடுப்பூசி உள்ளிட்டவை குறித்தும், தடுப்பூசியை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சமயத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட அனைத்து இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்களும் இணையத்தில் இலவசமாகக் கிடைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றசாட்டியுள்ளனர். கோவின் தளத்தில், தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனைத்து இந்தியர்களின் மொபைல் எண், ஆதார் எண், பாஸ்போர்ட் எண், வாக்காளர் அடையாள அட்டை எண், குடும்ப உறுப்பினர்கள் விவரம் உள்ளிட்ட அனைத்து தனிப்பட்ட தரவுகளும் இலவசமாக கிடைப்பதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோவின் செயலியில் இருந்து தனிநபர் விபரங்கள் கசிந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை கூறி வரும் நிலையில், தனிநபர் தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், புகார்கள் குறித்து விசாரிக்கப்படும் என்றும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு கூறுகையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கோவின் செயலி பாதுகாப்பானது.
அதன்படி, கோவின் செயலில் தனிநபர் தகவல்கள் அனைத்து பாதுகாப்பாக உள்ளது. தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகள் ஆதாரமற்றவை. மேலும், தனிநபர் தகவல்கள் கசிந்ததாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.