”அமித் ஷாவின் புரட்சிகரமான அறிவிப்பை எல்லோரும் வரவேற்கிறோம்” – ப.சிதம்பரம்
தமிழரை பிரதமராக்க வேண்டும் என்றும் அமித்ஷாவின் பேச்சுக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார். நேற்று சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த தென் சென்னை மக்களவை தொகுதி பாஜக நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழகத்தில் இருந்து ஒருவர் இந்த நாட்டின் பிரதமராக வரவேண்டும் என விரும்புகிறேன். இதை பாஜகவால்தான் செய்ய முடியும்.
இதற்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். கடந்த காலத்தில் தமிழகத்தில் இருந்து 2 பேருக்கு பிரதமர் ஆகும் வாய்ப்பு இருந்தும் நடக்கவில்லை என தெரிவித்தார். மேலும், பாஜகவை தமிழுக்கு எதிரான கட்சியாக திமுக திட்டமிட்டு கட்டமைக்கிறது. தமிழ் வளர்ச்சிக்கு பாஜக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது எனவும் கூறினார். தமிழரை பிரதமராக்க வேண்டும் என்ற அமித்ஷாவின் பேச்சுக்கு முதலமைச்சர் உட்பட பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
அந்தவகையில், அமித் ஷாவின் புரட்சிகரமான அறிவிப்பை எல்லோரும் வரவேற்கிறோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், தமிழரை நாட்டின் பிரதமராக ஆக்குவோம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்திருக்கிறார். இந்த புரட்சிகரமான அறிவிப்பை எல்லோரும் வரவேற்கிறோம். 2024ஆம் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழரைப் பிரதமராக ஆக்குவோம் என்று அவர் சொல்லியிருக்கிறார் என்றே நம்புகிறேன் என கூறியுள்ளார்.