மகளிர் ஜூனியர் ஹாக்கி – இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா!
2023 ஆசிய கோப்பை மகளிர் ஜூனியர் ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா.
2023 ஆசிய கோப்பை மகளிர் ஜூனியர் ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது இந்திய ஜூனியர் மகளிர் அணி. ஜப்பானின் கிபு மாகாணத்தில் ககாமிகாஹரா நகரில் 2023 ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், ஜப்பானை இந்திய அணி எதிர்கொண்டது.
பரபரப்பான இந்த அரையிறுதி போட்டியில் ஜப்பானை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, ஆசிய கோப்பை ஜூனியர் மகளிர் ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா. இதன் மூலம் இந்திய மகளிர் அணி இரண்டாவது முறையாக ஆசிய கோப்பை ஜூனியர் மகளிர் ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. மேலும், இந்தாண்டு இறுதியில் நடக்கவுள்ள உலகக்கோப்பை மகளிர் ஜூனியர் ஹாக்கி தொடருக்கும் இந்தியா தகுதி பெற்றுள்ளது.
இதனிடையே, சமீபத்தில் ஓமானில் நடைபெற்ற ஆசியக் கோப்பை ஜூனியர் ஆடவர் ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்து 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்திய ஜூனியர் ஆடவர் ஹாக்கி அணி 2004, 2008 மற்றும் 2015ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிலையில், இந்தாண்டும் 4வது முறையாக சாம்பியன் படத்தை வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.