அமேசான் வனப்பகுதியில் 40 நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட 4 குழந்தைகள்..!
அமேசான் வனப்பகுதிக்குள் காணாமல் போன 4 குழந்தைகள் 40 நாட்களுக்கு பின் பத்திரமாக மீட்பு.
கொலம்பியா, அமேசான் காடுகளில் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து காணாமல் போன 4 குழந்தைகள் 40 நாட்களுக்கு பிறகு உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனை கொலம்பிய நாட்டு அதிபர் கஸ்டாவோ பெட்ரோ உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், கொலம்பிய காடுகளில் கடந்த 40 நாட்களுக்கு முன்னர் மாயமான குழந்தைகள் 4 பேரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இது தேசத்திற்கான மகிழ்ச்சி செய்தி என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த மே 1-ஆம் தேதி செஸ்னா 206 என்ற ஒற்றை இன்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் அமேசானாஸ் மாகாணத்தில் உள்ள அரராகுவாரா மற்றும் குவாவியர் மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் டெல் குவேரியார் ஆகிய நகரங்களுக்கு இடையேயான பாதையில் ஏழு பேரை ஏற்றிச் சென்றபோது இயந்திரக் கோளாறு காரணமாக மேடே எச்சரிக்கையை வெளியிடப்பட்டுள்ளது.
பின்னரே ஒற்றை இன்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் 6 பயணிகள் மற்றும் ஒரு பைலட்டுடன் கொலம்பியாவிலிருந்து அமேசான் காட்டின் மேல் பறந்து கொண்டிருந்தபோது விமானம் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இதில், விமானி மற்றும் குழந்தைகளின் தாய் மாக்டலேனா முக்குடுய் உட்பட மூன்று பேர் விபத்தில் இறந்தனர் மற்றும் அவர்களின் உடல்கள் விமானத்திற்குள் கண்டெடுக்கப்பட்டன. 13, 9, 4 வயதுடைய நான்கு உடன்பிறந்த சகோதரர்கள், 12 மாத குழந்தையும் இந்த பாதிப்பில் இருந்து தப்பினர்.
ஆனால், அந்த 4 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. அதனையடுத்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. குழந்தைகள் உயிருடன் இருக்கலாம் என்று கருதி கிட்டத்தட்ட 40 நாட்களாக, பூர்வக்குடிகள் மற்றும் ராணுவத்தினரின் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், 0 நாட்களுக்குப் பின்னர் 4 குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, லெஸ்லி ஜேகோபோம்பேர் (13), சோலோனி ஜேகோபோம்பேர் முகுடி (9), டியன் ரனோக் முகுடி (4) மற்றும் கைக்குழந்தை கிறிஸ்டின் ரனோக் முகுடி ஆகிய 4 குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். 40 நாட்கள் பிறகு 4 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளது உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர். மீட்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களை கொலம்பிய அரசு பகிர்ந்ததுள்ளது.
சோர்வாக காட்சியளித்த அந்த 4 குழந்தைகளுடன் ராணுவ வீரர்கள், பூர்வக்குடிகள், தன்னார்வலர்கள் இருந்தனர். அமேசான் காட்டில் 40 நாட்கள் தாக்குப்பிடித்த குழந்தைகளுக்கு வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு பத்திரமாக குழந்தைகளை மீட்ட ராணுவ வீரர்கள் மற்றும் பூர்வக்குடிகளுக்கு இணையத்தில் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
¡Una alegría para todo el país! Aparecieron con vida los 4 niños que estaban perdidos hace 40 días en la selva colombiana. pic.twitter.com/cvADdLbCpm
— Gustavo Petro (@petrogustavo) June 9, 2023