நாய்கள் இறக்குமதிக்கு தடையில்லை.. மத்திய அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு!
வர்த்தக பயன்பாட்டிற்காக நாய்கள் இறக்குமதி செய்ய தடை விதித்த அறிவிப்பாணையை ரத்து செய்தது ஐகோர்ட்.
வெளிநாடுகளில் இருந்து வர்த்தக பயன்பாட்டுக்காக நாய்களை இறக்குமதி செய்ய தடை இல்லை என்று தெரிவித்து, மத்திய அரசு வெளியிட்ட தடை அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டு நாய் இனங்களை பாதுகாக்க வெளிநாடுகளில் இருந்து வர்த்தக பயன்பாட்டிற்கு நாய்களை இறக்குமதி செய்ய 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அன்னிய வர்த்தகத்துறை தலைமை இயக்குனர் தடை விதித்து அறிவிப்பாணை வெளியிட்டார்.
இந்த அறிவிப்பாணையை எதிர்த்து இந்திய கென்னல் கிளப், மெட்ரால் கன்னி கிளப் மற்றும் பாலகிருஷ்ணபட் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். உரிய ஆய்வு நடத்தாமல் வெளிநாடுகளில் இருந்து நாய்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளதாக மனுதாரர்கள் மனுவில் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
இந்த வழக்கு விசாரணையின்போது, இறக்குமதி செய்யப்படும் நாய்களால் உள்நாட்டு நாய்களுக்கு நோய்கள் பரவும் என மத்திய அரசு கூறுவதில் நியாயமில்லை என்றும் வர்த்தக ரீதியில் நாய்கள் இறக்குமதி செய்வதை மத்திய அரசு முறைப்படுத்தலாம் எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும், நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பாக 8 வாரங்களில் விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.