ஒருநாள் முன்னதாகவே தமிழகம் வருகிறார் அமித்ஷா!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒருநாள் முன்னதாக நாளை இரவே தமிழகம் வருகிறார்.
பாஜக அரசு ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜூன் 11-இல் தமிழகம் வருவதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, வேலூரில் பாஜக ஆட்சியின் சாதனைகளை விளக்கும் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பேரணியில் அமித்ஷா கலந்துகொண்டு உரையாற்றுகிறார். முன்னதாக ஜூன் 8ம் தேதி இந்த பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. பாஜக அரசின் 9 ஆண்டுகள் சாதனைகளை விளக்கும் வகையில் ஒரு மாதத்திற்குள் 66 பொதுக்கூட்டங்களை நடத்த தமிழக பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒருநாள் முன்னதாக நாளை இரவே தமிழகம் வருகிறார்.
அதன்படி, நாளை இரவு 9 மணிக்கு வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கிண்டி ஐடிசி நட்சத்திர ஓட்டலில் தங்கவுள்ளார். முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்கும் அமித்ஷா, பாஜக கூட்டத்திலும் பங்கேற்கவுள்ளார். மேலும், 11-ஆம் தேதி சென்னை கோவிலம்பாக்கத்தில் நாடாளுமன்ற பொறுப்பாளர்களுடன் சென்னையில் ஆலோசிக்கிறார். பின்னர் அன்று பிற்பகல் வேலூரில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்திலும் அமித்ஷா பங்கேற்கவுள்ளார்.