எல்லாத்தையும் தொண்டர்களிடம் கேட்டு முடிவெடுக்க முடியாது – இபிஎஸ் தரப்பு
கட்சி விதிகளை மீறினால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும் என வாதம்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சற்று முன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழங்கறிஞர் சிஎஸ் வைத்தியநாதன் வாதம் முன்வைத்து வருகிறார்.
அவர் கூறுகையில், கட்சி விதிப்படி, கட்சி விவகாரங்கள் தொடர்பாக பொதுக்குழு எடுக்கும் முடிவுகளே இறுதியானது. கட்சியின் அனைத்து முடிவுகளையும் தொண்டர்களிடம் கேட்டு எடுக்க முடியாது. ஒழுங்கு நடவடிக்கை உள்பட அனைத்து நடவடிக்கைளையும் எடுக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது. கட்சி விதிகளை மீறினால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் எப்படி நிவாரணம் கோர முடியும்?, மாநிலம் முழுவதும் தனியாக நிர்வாகிகளை ஓபிஎஸ் நியமித்து வருவதாகவும் இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, திருத்துவதற்கும், தளர்த்துவதற்கும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது. கட்சியின் உறுப்பினர் முதல் நிர்வாகிகள் வரை கட்சி விதிகளுக்கு கட்டுப்பட்டவர்கள் தான். கட்சியின் விதிகளுக்கு மேலானவர்கள் யாரும் இல்லை எனவும் வாதம் வைக்கப்பட்டுள்ளது.