ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை – ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு!
ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆக தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் (Repo Rate) 6.5% ஆகவே தொடருகிறது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் அறிவித்துள்ளார். இதன் விளைவாக, நிலையான வைப்புத்தொகை வசதி (SDF விகிதம்) 6.25% ஆகவும், விளிம்பு நிலை மற்றும் வங்கி விகிதங்கள் 6.75% ஆகவும் உள்ளது.
நாட்டின் பணவீக்க விகிதம் கட்டுக்குள் இருப்பதால் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்றும் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதை தொடர்ந்து கவனித்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் விகிதம் 4%க்கு மேலாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு இருந்ததை விட அதிக வேகத்தில் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது.
அனைத்து காரணிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, 2023-24 ஆம் ஆண்டிற்கான CPI இன் பணவீக்கம் 5.1% ஆக இருக்கும் என்றுள்ளார். மேலும், 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெற்று வருவதால் நாட்டில் பணப்புழக்கம் அதிகரித்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.5 சதவீதமாக இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் தெரிவித்துள்ளார்.