பொறுத்தது போதும் பொங்கி எழுவோம்.. கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவில் முதல்வர் பேச்சு!
திராவிடம் என்ற சொல்லைப் பார்த்து இன்று சிலர் பயப்படுகிறார்கள் என கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவில் முதல்வர் உரை.
முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்ச்சி சென்னை புளியந்தோப்பு பகுதியில் நடைபெற்றது. அப்போது உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆகஸ்ட் 7ஆம் தேதி கலைஞர் நினைவிடம் திறக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். திராவிடம் என்ற சொல்லைப் பார்த்து இன்று சிலர் பயப்படுகிறார்கள்.
கண்ணை மூடிக்கொண்டு விதண்டாவாதம் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.திராவிட மாடலை செய்து காட்டுவேன் என்ற தன்னம்பிக்கை கொண்டவன் நான், என்னுள் இந்த தன்னம்பிக்கையை ஊட்டியவர் கலைஞர். பாஜகவுக்கு எதிரான கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும். பொறுத்தது போதும் பொங்கி எழுவோம் என்ற உணர்ச்சியுடன் புறப்பட்டுள்ளோம். ஒற்றுமையின் மீது மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நமது உள்ளதை ஒற்றுமையால் கட்டமைப்போம்.
கருணாநிதி அடிக்கடி சொல்வார், நீ நான் என்றால் உதடுகள் ஒட்டாது, நாம் என்றால் தான் உதடுகள் கூட ஒட்டும். பாஜகவுக்கு எதிரான ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும். தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை, மாறுபாடுகளை மறந்து இந்தியாவை காக்க ஒன்று சேர்ந்தாக வேண்டும். தமிழ்நாட்டில் எப்படி ஒரு வலுவான கூட்டணியை அமைத்தோமோ, அதேபோல, நாடு தழுவிய அளவில் மதவாத, பாசிச, யதேச்சதிகார பாஜக ஆட்சியை அகற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்.
மக்களவை தேர்தல், யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்பதை தீர்மானிப்பதை விட, யார் ஆட்சி அமைக்க கூடாது என்பதை தீர்மானிப்பதாக அமைய வேண்டும். பாஜகவின் பிரிவினைவாத சூழ்ச்சிக்கு இறையாகிவிட கூடாது. வரும் நாடாளுமன்ற தேர்தல் யார் ஆட்சி அமைக்கப்படக்கூடாது என்பதற்கான தேர்தல், வரும் 23-ம் தேதி இதற்காக பீகாரில் எதிர்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தொலைபேசியில் தொடர்புகொண்டு அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறினார்.