குழந்தை கடத்தல் பீதியில் மூதாட்டி கொலை.!ஒரு மாதத்திற்கு பிறகு கிராமங்களில் இயல்பு வாழ்க்கை..!

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த அத்திமூர், களியம் கிராமத்தில் சென்னையில் இருந்து சாமி கும்பிட கோவிலுக்கு சென்றவர்களை கடந்த மே மாதம் 9-ந்தேதி குழந்தை கடத்தல் கும்பல் என கருதி கிராம மக்கள் அடித்து உதைத்தனர்.

இதில் சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்த ருக்மணி (வயது 65) என்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் உடன் வந்த உறவினர்களான மோகன்குமார், சந்திரசேகரன், கஜேந்திரன், வெங்கடேசன் ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின்பேரில் போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னராஜ், இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்பாபு (போளூர்), ராஜகோபால் (கலசபாக்கம்), சுரேஷ்சண்முகம் (கடலாடி) மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் தயாளன், சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் இரவு பகலாக கிராமங்களில் தேடுதல் வேட்டை நடத்தி 62 பேர் மீது வழக்கு பதிவு செய்து, 44 பேரை கைது செய்தனர். மீதமுள்ள 18 பேரை கைது செய்ய போலீசார் தீவிரமாக உள்ளனர்.

போலீசாருக்கு பயந்து தம்புகொட்டான்பாறை, ஜம்பங்கிபுரம், காமாட்சிபுரம், கணேசபுரம், களியம், அத்திமூர், பனப்பாம்பட்டு, அண்ணாநகர், திண்டிவனம் உள்பட 10 கிராம மக்கள் தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் சென்று தலைமறைவாகி விட்டனர்.

சிலவீடுகளில் பெண்கள் மட்டுமே இருந்தனர். கடைகள் திறக்கப்படவில்லை. விவசாய பணிகள் முடங்கியது. பஸ்கள் பயணிகள் இன்றி சென்றன. அந்த கிராமங்கள் தொடர்ந்து போலீசாரின் கண்காணிப்பில் இருந்தன.

தற்போது படிப்படியாக வெளியூர் சென்ற கிராம மக்கள் ஊர் திரும்பி வருகின்றனர். கடைகள் திறக்கப்பட்டுள்ளன. விவசாய வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஒரு மாதத்திற்கு பிறகு இந்த கிராமங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment