உள்ளூர் மக்களின் முயற்சிகள் ஒடிசா மக்களின் இரக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது..! முதல்வர் நவீன் பட்நாயக்
ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய 1000க்கும் மேற்பட்டவர்களை உள்ளூர் மக்கள் காப்பாற்றியதாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா ரயில் நிலையம் அருகே நிகழ்ந்த மூன்று ரயில்கள் விபத்தில், 288 பயணிகள் உயிரிழந்த நிலையில், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாட்டில் உள்ள மக்கள் முதல் உலகத் தலைவர்கள் வரை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதனை அடுத்து இந்த விபத்து மனித தவறினால் ஏற்பட்டது அல்ல என்றும் வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்த முயற்சித்ததாக கூறி மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ) வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இன்று இரண்டாவது நாளாக சிபிஐ சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் ரயில் மோதிய விபத்தில் சிக்கிய 1000ற்கும் மேற்பட்ட பயணிகள் உள்ளூர் மக்களால் காப்பாற்றப்பட்டதாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், உள்ளூர் மக்களின் முயற்சிகள் ஒடிசா மக்களின் இரக்கத்தையும் மனித நேயத்தையும் வெளிப்படுத்தியுள்ளன, மீட்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு மற்றும் இரத்த தானத்திற்கான நீண்ட வரிசையில் நின்ற என் மக்களைப் பற்றி பெருமைப்படுகிறேன் என்று கூறினார்.