காடுவெட்டி குரு சிலை அகற்றம்.! பாமக தொண்டர்கள் 2 பேர் தீக்குளிக்க முயற்சி..!

Default Image

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ளது கடைபேரிக்குப்பம். இந்த பகுதியில் பா.ம.க. கொடிக்கம்பம் உள்ளது. இதன் பக்கத்தில் 2 சிங்கங்கள் சிலை அமைப்பதற்கு பீடத்தை பா.ம.க.வினர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கட்டினார்கள். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இந்த பீடத்தை போலீசார் இடித்து அகற்றினர்.

இந்தநிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் கடைப்பேரி குப்பத்தை சேர்ந்த பா.ம.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் முத்துக்குமரன் தலைமையில் பா.ம.க.வினர் கொடிக் கம்பம் முன்பு திரண்டனர். இங்கு பள்ளம் தோண்டி 6 அடி உயரத்துக்கு கிரானைட் கற்கள் அமைத்தனர். அதில் மறைந்த வன்னியர்சங்க தலைவர் காடுவெட்டி குருவின் மார்பளவு சிலையை வைத்தனர். அந்த சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர்கள் எழிலரசி, திருமணி, ஜோசப் செல்வராஜ், சப்-இன்ஸ் பெக்டர்கள் பரசுராமன், சுரேஷ் முருகன், தனிப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜ், வானூர் தாசில்தார் ஜோதிவேல் மற்றும் வருவாய் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்தனர். அனுமதி இல்லாமல் சிலை வைக்கக் கூடாது என்று கூறினர். இதனால் பா.ம.க. வினருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

இதையறிந்த அந்த பகுதி பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். அவர்கள் சிலையை அகற்ற விட மாட்டோம் என கூறினர். அப்போது பா.ம.க. தொண்டர்கள் அன்பரசு, ரகுராஜ் ஆகிய 2 பேரும் திடீரென தங்களது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். சிலையை அகற்றினால் தற்கொலை செய்வோம் என கூறினர். அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்கள் 2 பேரின் உடலிலும் தண்ணீரை ஊற்றினர்.

அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட சிலை அகற்றப்படும். நீங்கள் கலைந்து செல்லுங்கள் என கூறினர். ஆனால் சிலையை அகற்றவிடமாட்டோம் என கூறி பா.ம.க.வினர் மற்றும் பொதுமக்கள் அங்கேயே கோ‌ஷங்கள் எழுப்பியவாறே நின்றனர்.

போலீசார் திடீரென தடியடி நடத்தினர். இதில் நாலாபுறமும் அலறியடித் துக் கொண்டு பா.ம.க.வினர் மற்றும் பொதுமக்கள் சிதறி ஒடினர். பின்னர் சிலையை போலீசார் அகற்றினர்.

போலீசார் தடியடி நடத்தியதில் கடைப் பேரிகுப்பத்தை சேர்ந்த முத்துலட்சுமி, அன்பரசன் உள்பட 8 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் வானூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து வானூர் போலீசில் கிராம நிர்வாக அதிகாரி மீனாட்சி புகார் செய்தார். இதையொட்டி முன்னாள் பா.ம.க. ஒன்றிய செயலாளர் முத்துக்குமரன் உள்பட 10 பேர் மீது வழக்குபதிவு செய்தனர்.

இதில் சிலம்பரசன் (வயது 24), மணிகண்டன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர். போலீசார் வீடு வீடாக சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் ஆண்கள் தலைமறைவாகி விட்டனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே வீட்டில் உள்ளனர். அவர்களும் வெளியேவராமல் வீட்டுக்குள்ளே முடங்கியுள்ளனர். இதனால் அந்த கிராமமே வெறிச்சோடி காணப்படுகிறது.

கடைபேரிக்குப்பம் புதுவை மாநிலத்தை ஒட்டி உள்ள பகுதி என்பதால் சேதுராப்பட்டு சப்-இன்ஸ் பெக்டர் முத்துக்குமாரசாமி தலைமையில் கரசூர் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் கடை பேரிக்குப்பம் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்