ஒடிசா ரயில் விபத்து: தமிழர்கள் யாரும் உயிரிழக்கவில்லை…137 பேர் சென்னை வந்தடைந்தனர்.!
ஒடிசா ரயில் விபத்தில் இருந்து மீட்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளுடன், சிறப்பு ரயில் காலை 4.30 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தது.
ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டை சேர்ந்த 137 பேர் ரயில் மூலம் சென்னை வந்தடைந்தனர். அவர்களை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சென்று வரவேற்றார். அவர்களில் 8 பேருக்கு சிகிச்சை தேவைப் படுவதால் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் லேசான காயமடைந்தவர்களுக்கு அரசு சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சை தேவைப்படும் அளவிற்கு யாரும் இல்லை. குறிப்பாக, தமிழகத்தை சேர்ந்த யாரும் உயிரிழந்ததாக இதுவரை தகவல் இல்லை. இது தமிழ்நாட்டிற்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
முன்னதாக, தமிழகத்தை சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியிருந்தது. அதுமட்டுமில்லாமல், விபத்து நடந்த ரயிலில் தமிழ்நாட்டை சேர்ந்த 190 பேர் பயணம் செய்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், இதுவரை கிடைத்த தகவலின்படி, தமிழ்நாட்டை சேர்ந்த யாரும் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழக்கவில்லை என்று ஒடிசா சென்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி குமார் தகவல் தெரிவித்தாக கூறப்படுகிறது.