வெளியே வராதீங்க….! அடுத்த 3 நாட்களுக்கு வெயில் அலர்ட்….
மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெயில் கொளுத்தி எடுக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜூன் 4ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்புள்ளது. சில இடங்களில் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும்.
வெப்பநிலை:
அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்:
எனவே, வெயில் நேரத்தில் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் வெளியே வர வேண்டாம். வெளியே சென்றாலும் அடிக்கடி தண்ணீர், மோர் போன்றவற்றை குடிக்க வேண்டும்.
மழை:
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நேற்று முதல் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவுகிறது.
சென்னை:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.