தோனிக்கு அறுவை சிகிச்சை வெற்றி… அடுத்த ஐபிஎல்லில் மீண்டும் களமிறங்குவாரா.?

Dhoni Surgery

மும்பையில் தோனிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்தது, அடுத்த ஐபிஎல் சீசனில் தோனி விளையாடும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு 5-வது முறையாக சென்னை அணிக்கு ஐபிஎல் கோப்பையை பெற்றுத்தந்த கேப்டன் மகேந்திர சிங் தோனி, நீண்ட நாட்களாக இடது கால் முட்டியில் வலியுடன் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் அதற்கான அறுவை சிகிச்சையை மும்பை மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்துகொண்டார். இதனை சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஐபிஎல் இறுதிப்போட்டி முடிந்தவுடன் அடுத்தநாள் அகமதாபாத்திலிருந்து மும்பை சென்ற தோனி, பிரபல எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டின்ஷா பர்திவாலாவிடம் ஆலோசனை செய்தபின் அறுவைசிகிச்சை செய்துகொண்டார். இந்திய கிரிக்கெட் அணிக்கு (பிசிசிஐ) உள்ள மருத்துவ நிபுணர் குழுவில் டாக்டர் டின்ஷா பர்திவாலாவும் ஒருவர். மேலும் ரிஷப் பந்திற்கும் அறுவை சிகிச்சை செய்தவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் இது குறித்து கூறும்போது, மும்பையின் கோகிலாபென் மருத்துவமனையில் தோனிக்கு வெற்றிகரமாக அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. தற்போது தோனி ஓய்வில் இருக்கிறார், இரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார், சில நாட்கள் வரை தோனி ஓய்வில் இருக்கக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், தற்போது அனைவரின் கவனமும் தோனி அடுத்த ஐபிஎல் சீசனிலும் விளையாட வேண்டும் என்பது குறித்து தான். 2023 ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்தே தோனிக்கு காயம் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. மேலும் அவர் விளையாடும் போதும் களத்தில் வலியில் அவதிப்பட்டது தெரியவந்தது. ஓடும்போதும் சில சமயங்களில் அவர் சிரமப்பட்டார்.

இதனால் பேட்டிங்கில் கூட கடைசியாக களமிறங்கி விளையாடினார். ஆனால் அவரது விக்கெட் கீப்பிங்கில் எந்த வித குறையும் இல்லை. இந்த நிலையில் இறுதிப்போட்டி முடிந்ததும் அறுவை சிகிச்சை செய்வது குறித்தும் தோனி தான் முடிவெடுத்ததாக காசி விஸ்வநாதன் தெரிவித்தார். தற்போது அடுத்த ஐபிஎல்லில் முழு உடற்தகுதியுடன் தோனி விளையாடுவாரா என எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

ஏற்கனவே ஐபிஎல் இறுதிப்  போட்டியின் போது தோனி ஓய்வு முடிவு குறித்து கூறியிருந்தார். நான் இப்போது கூட ரசிகர்களுக்கு நன்றி கூறிவிட்டு விடைபெறுவது எனக்கு எளிதான ஒன்றுதான். இதில் சிக்கலான விஷயம் என்னவென்றால் அடுத்த 9 மாதங்களுக்கு கடின பயிற்சி செய்து அடுத்த ஐபிஎல் சீசனில் விளையாடுவது தான் என கூறினார்.

ரசிகர்களின் அன்பிற்கு நான் எதாவது செய்யவேண்டும் என கூறிய தோனி, இது தான் எனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி நேரம், எல்லாம் தொடங்கியது இங்குதான். அனைவரும் என் பெயரைச் சொல்லி கூச்சலிட்டனர். நான் அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடினால் அது நான் என் ரசிகர்களுக்கு அளிக்கும் அன்புப்பரிசு என தோனி, 17-வது ஐபிஎல் சீசனில் விளையாடுவது குறித்த ஹின்ட் கொடுத்தார். ஆனால் என் உடல் எனக்கு ஒத்துழைக்கவேண்டும் எனவும் அவர் மேலும் கூறியிருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்