பொதுச்செயலாளர் பதவி இனி இல்லை..!

Default Image

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகவும், தமிழகத்தின் முதல்-அமைச்சராகவும் இருந்தவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு உள்கட்சி பூசல் காரணமாக அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது. முதல்-அமைச்சரான எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சரான ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனி அணியாக செயல்பட்டு வந்தனர். சமரசம் ஏற்பட்ட நிலையில் 2 அணிகளும் ஒன்றாக இணைந்தன.

இதையடுத்து முடக்கி வைக்கப்பட்டிருந்த இரட்டை இலை சின்னமும், கட்சி பெயரும் அந்த அணிக்கே திரும்ப கிடைத்தது. இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ந்தேதி கூட்டப்பட்டது. அதில் அ.தி.மு.க.வில் சட்டவிதிகள் திருத்தம் செய்யப்பட்டன. புதிய சட்டவிதிகளின்படி கட்சியில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டது. அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டன.

அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்பட்டனர்.

கட்சி நிர்வாகிகளை நியமித்தல், முக்கிய அரசியல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது, அவசர நேரத்தில் கட்சியின் சார்பில் கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் படைத்தவர்களாக அவர்கள் 2 பேருமே விளங்குகின்றனர்.

இதற்கிடையே அ.தி.மு.க. வின் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளும், புதிய சட்ட விதிகளும் தேர்தல் கமிஷனின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் பரிசீலனை செய்து வந்தனர். புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடுத்த முடிவுகளுக்கும், புதிய விதிகளுக்கும் தேர்தல் கமிஷன் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவை தேர்தல் கமிஷன் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

தேர்தல் கமிஷன் நடவடிக்கை மூலம் அ.தி.மு.க.வில் இனி பொதுச்செயலாளர் பதவி கிடையாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு அ.தி.மு.க. என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அ.தி.மு.க.வின் சட்டவிதியில் மாற்றம் செய்ததற்கு அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம் வழங்கி இருப்பதன் மூலம் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு உள்ளது.

அமைச்சர் கே.பாண்டியராஜன் சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில், “அ.தி.மு.க. அடிப்படை விதிகளில் மாற்றம் செய்ததை தேர்தல் கமிஷன் ஏற்றுக்கொண்டது வரவேற்கத்தக்கது. இதன்மூலம் அ.தி.மு.க.வில் விரைவில் புதிய பொறுப்புகள் நியமனம் செய்யப்பட்டு கட்சியின் கட்டமைப்புகள் மேலும் வலுப்படுத்தப்படும்” என்றார்.

மூத்த அமைச்சர் ஒருவர் கூறுகையில், ‘உறுப்பினர் சேர்க்கை நிறைவடைந்ததும் அமைப்பு ரீதியான கட்சி தேர்தல் நடத்தப்படும். புதிதாக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு விரைவில் கூடி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரை தேர்ந்தெடுக்கும். இந்த தேர்வு நியாயமான முறையில் நடைபெறும்’ என்றார்.

அ.தி.மு.க.வின் புதிய விதிகளுக்கு ஒப்புதல் அளித்த தேர்தல் கமிஷன் முடிவுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறும்போது, “இதுதொடர்பான வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தேர்தல் கமிஷன் ஒப்புதல் அளித்திருப்பது வேடிக்கையாக உள்ளது. இந்த அங்கீகாரத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்” என்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்