பலத்த பாதுகாப்புடன் கர்நாடக மாநிலம் ஜெயநகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்!
இன்று பலத்த பாதுகாப்புடன் கர்நாடக மாநிலம் ஜெயநகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் 12–ம் தேதி கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. ஆனால் அன்றைய தினம் பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை. அந்த தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்த விஜயகுமார் எம்.எல்.ஏ, கடந்த மாதம் 4–ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
இதையடுத்து, ஜெயநகர் தொகுதிக்கு ஜூன் மாதம் 11-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி இந்த தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர். மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி ராமலிங்க ரெட்டியின் மகளான சவுமியா ரெட்டியும், பா.ஜனதா சார்பில் மறைந்த விஜயகுமார் எம்.எல்.ஏ.வின் சகோதரர் பிரகலாத் பாபுவும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆதரவு அளித்துள்ளதால், காங்கிரசுக்கும் பா.ஜனதாவுக்கு இடையே நேரடிப் போட்டி உள்ளது.
ஓட்டுப்பதிவு அமைதியான முறையில் நடைபெற ஜெயநகர் தொகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் ஜெயநகர் தொகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.