மக்களவை தேர்தல் முடிந்த பிறகே மக்கள்தொகை கணக்கெடுப்பு – மத்திய அரசு முடிவு
2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிந்த பிறகே, இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த உள்ளதாக தகவல்.
2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிந்த பிறகே, இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பை, 2020ம் ஆண்டு தொடங்கி 2021ல் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், நாட்டில் கொரோனா பரவல் காரணமாக இப்பணிகள் ஒத்திவைக்கப்பட்டன.
இந்த நிலையில், 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிந்த பிறகே, மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் கூறப்படுகிறது. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து வருகிறது. அந்தவகையில் கடந்த 2011-ம் ஆண்டு கடைசியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்களிடம் 31 கேள்விகள் கேட்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதில், குறிப்பாக குடும்பங்களில் தொலைபேசி இணைப்பு, இணையதள வசதி, செல்போன் அல்லது ஸ்மார்ட்போன், கணினி, சைக்கிள், ஸ்கூட்டர் அல்லது மோட்டார் சைக்கிள், கார், ஜீப் அல்லது வேன் போன்றவை உள்ளனவா? என்பன போன்ற கேள்விகள் கேட்டு விவரங்கள் சேகரிக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும், புதிய அட்டவணையை அரசாங்கம் இன்னும் அறிவிக்காத நிலையில், அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது. நாட்டில் இது முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும்.